கைகேயியின் மறுமொழி 2145. | ஆனவன் உரைசெய, அழிவு இல் சிந்தையாள், ‘தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத் தேன் அமர் தெரியலான், தேவர் கைதொழ, வானகம் எய்தினான்; வருந்தல் நீ என்றாள். |
ஆனவன் - அப்பரதன்; உரைசெய - வினாவ; அழிவு இல் சிந்தையாள் - எதற்கும் கலங்காத திட சித்தம் உடைய கைகேயி; ‘தானவர் வலி தவ நிமிர்ந்த தானை - அசுரரது வலிமை கெடும்படி அவர்மேற் சென்ற சேனையை உடைய; அத் தேன் அமர் தெரியலான்- அந்தத் தேன் பொருந்திய மலர்மாலையை அணிந்த தயரதன்; தேவர் கைதொழ - (தமக்குவாழ்வளித்தவன் வருகின்றான் என்று கருதி) தேவர்கள் கைகூப்பி வணங்க; வானகம் எய்தினான் - விண்ணுலகத்தை அடைந்தான்; நீ வருந்தல்’ - நீ துன்புறாதே;’ என்றான் -. மன்னர் மன்னனாகிய தன் கணவன் இறப்பவும் மனங்கலங்காது அச்செய்தியைத் தானே தன்மகனிடமே சொல்லும் துணிவும் உடையளாய்ப் பின்னும் மகனை நோக்கி ‘நீ வருந்தாதே’என்றுரைக்கும் நெஞ்சுரமும் பெற்றவளாதலின் ‘அழிவு இல் சிந்தையாள்’ என்றார். கணவன் இறந்த செய்தியைச் சொல்லும் போது ‘தானவர் வலிதவ நிமிர்ந்த தானைத் தெரியலான்’ எனத் தன்கணவனைப் பற்றிய பெருமிதம் கைகேயியின் சொற்களில் இருத்தல் அறிந்து இன்புறுக. இனி தன்மகனுக்கு அரசு பெறுதற்கு உதவிய இருவரங்களைத் தான் பெற ஏதுவாகிய சம்பராசுரப் போரை நினைவுகூர்ந்து ‘தானவர் வலிதவ நிமிர்ந்த தாளை’ என்றான் என்றுமாம். 44 |