பரதன் தாயைக் கடிந்து பேசுதல் 2147. | வாய் ஒளி மழுங்க, தன் மலர்ந்த தாமரை ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர, ‘தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல், நீ அலது உரைசெய நினைப்பார்களோ?;’ என்றான் |
(பரதன் தேறி) தன் வாய் ஒளி மழுங்க - தன் முகவொளி மங்கிப் போகவும்; மலர்ந்த தாமரை ஆய் மலர் நயனங்கள் - அன்றலர்ந்த தாமரையின் ஆராய்ந்த அழகுமலர் ஆகியகண்கள்; அருவி சோர்தர - நீரை அருவியாகச் சொரியவும்; (தாயை நோக்கி) ‘செவியில் - காதுகளில்; எரிதீ வைத்த அனைய தீய சொல் - எரிகின்ற நெருப்பைவைத்தது போன்ற கொடுஞ் சொற்களை; உரைசெய - பேசுதற்கு; நீ அலது - நீ அல்லாமல்; நினைப்பரோ? - (பிறர்) நினைப்பார்களோ?;’ என்றான்-. கைகேயியின் கல்நெஞ்சு ‘வருத்தல் நீ’ என்ற (2145) உரையால் வெளிப்படுதலின், நீ அலதுபிறர் உரைசெய்ய நினையவும் மாட்டார்; பேசுவது எங்ஙனம் என்றான். கைகேயிநினைத்ததோடன்றிப் பேசவும் செய்தனள் என்ற அவள் கொடுமையை ‘நினைப்பரோ’ என்ற பரதன்வினா புலப்படுத்தியது. ‘ஓ’ வினாப்பொருட்டு; ‘நினையார்’ என்பது விடை. 46 |