துயர் மிகுதியால் பரதன் புலம்புதல்  

2148.எழுந்தனன், ஏங்கினன்; இரங்கிப் பின்னரும்
விழுந்தனன்; விம்மினன்; வெய்து உயிர்த்தனன்;
அழிந்தனன்; அரற்றினன்; அரற்றி, இன்னன
மொழிந்தனன், பின்னரும் - முருகன் செவ்வியான்;

   முருகன் செவ்வியான்-முருகனை ஒத்த பேரழகு உடைய பரதன்;
ஏங்கினன் எழுந்தனன்- (விழுந்து கிடந்ததரையில்இருந்தும்) ஏக்க முற்று
எழுந்து; இரங்கி - மனம் வருந்தி; பின்னரும் விழுந்தனன்- மீண்டும்
கீழ்விழுந்து; விம்மினன் - மனம் பொருமித்துடித்து; வெய்து
உயிர்த்தனன்
வெப்பமாகப் பெருமூச்சு விட்டு;  அழிந்தனன் -
மனம்
கெட்டு; அரற்றினன் - பல படியாகப் பிதற்றலானான்; அரற்றி - புலம்பி;
பின்னரும் - பிறகு; இன்னனமொழிந்தனன் - இவ்வாறு பேசலானான்.

     முருகன் - அழகன். முருகு என்னும் சொற்கு அழகு, மணம், இளமை,
கடவுள் தன்மை என்னும்நான்கு பொருள் உண்டு.  முருகன் மணம் கமழ்
தெய்வத்து  இள நலம்“ (திருமுருகு290) உடையன்ஆதலின் பரதனுக்கு
உவமையாயினன்,  ‘இன்னன்’ என்பதனைப் பின்வரும் ஒன்பது செய்யுள்கள்
விரிக்கும் .                                                   47