பரதன் தயரதனை நினைத்து முன்னிலைப்படுத்தி அரற்றுதல்  

2149.‘அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறத்னை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ?

     ‘இறைவ! - தயரத மன்னனே!; அறம்தனை வேர் அறுத்து -
தருமத்தை வேரோடேஅழித்து; அருளைக் கொன்றனை - அருளை உயிர்
போக்கி; சிறந்த நின் தண் அளித்திருவைத் தேசு அழித்து - உயர்ந்து
சிறந்த நின் குளிர்ந்த கருணைச் செல்வத்தை ஒளிகெடுத்து; இறந்தனை
ஆம் எனின்
- இறந்து  பட்டாய் என்றால்; நீதியை மறந்தனை- நீதியை
மறந்துவிட்டாய் ஆனாய்; உனக்கு -; இதின் - இதனைக் காட்டிலும்; மாசு-
குற்றம்; மேல் உண்டோ - மேம்பட்ட துண்டோ?’

     தயரதன் இறந்தபடியால் உலகில் அறம்காப்பார் இல்லாமையால் அறம்
கெட்டது. தயரதன்இறப்பே அறம், அருள், ஒளி இவற்றை உலகில்
நில்லாதபடி செய்துவிட்டது என்பது இதனாற்கூறியது. எனவே, தயரதன்
ஆட்சிச் சிறப்புப் புலப்படுகிறது. “திருவுடை மன்னரைக் காணில்திருமாலைக் கண்டேனே” (திவ்வியப்-3271) என்பராதலின் அரசனை ‘இறைவ!’ என்றான்.
வள்ளுவரும் ‘இறைமாட்சி’ என்றது காண்க. தயரதன் இறவாதிருந்து
இவற்றையெல்லாம் பழித்தாற்போலப் புகழையே கூறினானாம்.         48