2150. | ‘சினக் குறும்பு எறிந்து, எழு காமத் தீ அவித்து, இனக் குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும் மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய்! மறந்து உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்பாலதோ? |
‘சினக்குறும்பு எறிந்து-வெகுளியாகிய பகையை வெட்டி அழித்து; எழு காமத் தீ அவித்து - மனத்தில்தோன்றகின்றகாமம் ஆகிய நெருப்பை அணைத்து; இனக் குறும்பு யாவையும் எற்றி -கூட்டமாக உள்ளகுற்றப் பகைகளாகிய உலோபம் முதலிய அனைத்தையும் அடித்துப் போட்டு; யாவர்க்கும் - எல்லா மக்களுடையமனத்துக்கும்; உறுநெறி - ஏற்ற வழியிலே; செலும் வள்ளியோய்!- நடக்கின்றவள்ளலே!; மறந்து - (தற்போது அதனை) மறந்து; உனக்கு உறு நெறி செலல்-உனக்கு ஏற்ற வழியில் நடப்பது; ஒழுக்கின்ற பாலதோ?- நல்லொழுக்கத்திற் சேர்ந்ததாகுமா? திரும்பத் திரும்பத் தொல்லை கொடுக்கும் பகையைக் ‘குறும்பு’ என்பது வழக்கம். காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் எனப்பட்ட குற்றங்கள் ஆறனுள் காமமும், வெகுளியும், ‘சினக்குறும்பு’ ‘காமத்தீ’ என முன்னடியிற் கூறப் பெறுதலின் ‘இனக்குறும்பு’ என்பது ஏனைய நான்கையும் குறிக்கும். அகத்தே மறைந்திருந்து தொல்லை கொடுப்பன ஆதலின் ‘குறும்பு’எனப்பெற்றன. பிறர்க்கு நன்மை செய்துவந்த தயரதன் இறந்து தனக்கு நன்மை தேடியவனாக ஆனான்என்பது பரதன் புலம்பல் - “மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன், என்னுயிர்க்கு உறுவதும்செய்ய எண்ணினேன்” (1327) என்ற தயரதன் கூற்றை ஈண்டுக் கருதுக. துறந்து செய்வதாகத் தயரதன்கூறியதை இறந்து செய்தானாகப் பரதன் புலம்பினன் என அறிக. ‘ஓ’ வினாப்பொருட்டு. 49 |