| 2153. | ‘பல்  பகல் நிழற்றும் நின் கவிகைப் பாய் நிழல்  நிற்பன பல் உயிர் உணங்க, நீ நெடுங்  கற்பக நறு நிழல் காதலித்தியோ? -  மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே! |  
     மல் பக மலர்ந்த தோள் -  மல் தொழில் தொலையும்படி அகன்று  பரந்த தோள்களை உடைய; மன்னர் மன்னனே! -சக்கரவர்த்தியே!;  பல்பகல் நிழற்றும் - பல காலமாக (உலகுக்கு) நிழலைத் தரும்; நின்  கவிகைப் பாய்நிழல் - நினது வெண்குடையின் பரந்துபட்ட  நிழற்கீழ்;  நிற்பனபல் உயிர் - வாழ்வனவாகிய அனைத்துயிர்களும்; உணங்க -  (நின்குடை நிழல்இன்மையால்) வாடி வற்ற; நீ -; நெடுங் கற்பக நறு  நிழல் - (விண்ணுலகின்கண் உள்ள)நெடிய கற்பக மரத்தின் நறுமணம்  வீசும் நிழலை; காதலித்தியோ - விரும்பினாயோ?      பிறருக்கு நிழல் செய்த நீ இப்போது ஒரு நிழலின்கண் இருக்க  விரும்பியது சிறந்ததாகுமாஎன்பது  பரதன் வினாவாகும். உணங்கல் -  வெயிலிற் காய்தல். குடைநிழல் என்பதால் ‘உணங்க’ எனஉபசரிக்கப்பெற்றது.  அறமும் தண்ணளியும் இன்றிக் குடிமக்கள் அல்லற்படுவதை ‘உணங்க’ லாகக்  கொள்க. ‘பல்பகல்’ என்றதை முன் கூறிய “அறுபதினாயிரம் ஆண்டு” (182)  என்றதனால் அறிக. “காதலித்தியோ” என்றது அக்கற்பக நிழலும் சம்பரனைத்  தொலைத்து நீ அளித்த நிழலன்றோஎன்னும் குறிப்பினை உள்ளடக்கியது.  ‘மன்னனே!’விளி.                                             52  |