2157. | ‘பற்று இலை, தவத்தினின் பயந்த மைந்தற்கு முற்று உலகு அளித்து, அது முறையின் எய்திய கொற்றவன் முடி மணக் கோலம் காணவும் பெற்றிலை போலும், நின் பெரிய கண்களால்?’ |
பற்று இலை- ஆசை யற்றவன் (நீ) (பந்த பாசங்களை விலக்கியவன்); தவத்தினின் பயந்த மைந்தற்கு- தவம் முயன்று அரிதின் பெற்ற மைந்தனாகிய இராமனுக்கு; உலகு முற்று அளித்து - உலகம்முழுவதையும் கொடுத்து; அது - அவ்வுலகை; முறையின் எய்திய - அரச பரம்பரை முறைப்படி அடைந்த; கொற்றவன் - இராமனது; முடி மணக் கோலம் - முடிசூட்டுவிழாக் காட்சி அழகை; நின் பெரிய கண்களால் - உனது அகன்ற கண்களால்; காணவும் பெற்றிலைபோலும் - கண்டு மகிலும் பேற்றையும் அடையாமல் விட்டாய் போலும். பற்றற்றவனாய் விண்ணுலகு சென்றான் தயரதன் என்பதை இதனாற் குறித்தான். இனி, ‘பற்றிலைதவத்தினின்’ என்று இணைத்து, தயரத மன்னனே! நீ தவத்தினில் பற்றுள்ளவனாயிருந்திருந்தால்இறவாமலே இராமனுக்கு முடி சூட்டு விழாச் செய்து. அக்காட்சி கண்டு மகிழ்ந்து, பின்னர்த் தவம்செய்யச் சென்றிருக்கலாம். அவ்வாறு தவத்திற் பற்றில்லாதவனாயிருந்ததால் இறந்து இராமன்முடிசூட வேண்டியதாக, அம்முடிசூட்டு விழாக் காணும் பேறு பெறாதவனாக ஆய்விட்டாயே என்று புலம்பினன் என்க. 56 |