பரதன் தன்னைத் தானே தேற்றிக்கொள்ளுதல் 2158. | ஆற்றலன், இன்னன பன்னி ஆவலித்து, ஊற்று உறு கண்ணினன், உருகுவான்; தனைத் தேற்றினன் ஒரு வகை; சிறிது தேறிய, கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான். |
ஆற்றலன் - (தந்தை இறந்த துயரைப்) பொறுக்க மாட்டாதவனாய்; இன்னன -இவ்வாறமைந்த சொற்களை; பன்னி - பலமுறை சொல்லி; ஆவலித்து -அழுதிரங்கி; ஊற்று உறு கண்ணினன் - ஊற்றுப் போல மேலும் மேலும் பெருகுகின்ற கண்ணீரையுடையவனாய்; உருகுவான்- மனம் கரைந்து உருகும் பரதன்; தனை ஒருவகைதேற்றினன் - தன்னைத் (தானே) ஒருவகையாகத் தேற்றிக் கொண்டான்; சிறிது தேறிய- ஓரளவு மனத்தெளிவு அடைந்த; கூற்று உறழ் வரிசிலைக் குரிசில் - யமனை ஒத்தகட்டமைந்த வில்லினை உடைய பரதன்; கூறுவான் - சொல்லுவான் ஆனான். அவலித்து - அவலப்பட்டு (அழுகை அடைந்து) என்பது ஆவலித்து என முதல் நீண்டதுதுக்கமிகுதியைக் காட்டியது. ஊற்று உறு கண் - ஊற்றில் நீர் பெருகுவது போல கண்ணிலிருந்துதுன்பத்தால் நீர் பெருகுகிறது என்பதாம். ‘கூற்று உறழ்’ என்பதனைக் குரிசில் என்பதனோடுகூட்டுக. யமனை ஒத்த கட்டமைந்த வில் எனலும் ஆம். 57 |