கைகேயி இராமன கானகம் சென்றமையைக் கூறுதல் 2160. | அவ் உரை கேட்டலும், அசனிஏறு என, வெவ் உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்; ‘தெவ் அடு சிலையினாய்! தேவி, தம்பி, என்று இவ் இருவோரொடும் கானத்தான்’ என்றாள். |
அவ் உரை கேட்டலும்- (பரதன் கூறிய) அவ் வார்த்தைகளைக் கேட்டவுடனே; அசனி ஏறு என - பேரிடிபோல; வெவ் உரை வல்லவள்- கொடுஞ்சொற்களைச் சொல்லும் ஆற்றல் படைத்தவளாய கைகேயி; மீட்டும் கூறுவாள் - மறுபடியும் கூறத் தொடங்கி; ‘தெவ் அடு சிலையினாய்! - பகைவரைக் கொல்லும் வில்லுடைய பரதனே! (இராமன்) தேவி; தம்பி என்று இவ் இருவோரொடும் - தன் மனைவியும், தம்பியும் ஆகிய சீதை, இலக்குவன் ஆகிய இந்த இரண்டு பேரோடும்; கானத்தான் - காட்டின்கண் உள்ளான்;’ என்றாள்-. ‘அசனி ஏறு’ போலக் கொடுஞ்சொல் கூற வல்லவள் கைகேயி என்றார். இது இப்படலத்து 45ஆம் பாடலிலும் வந்துள்ளது. இராமன் ஒருவனே காடு செல்ல வேண்டியவன் ஆதலின் ‘கானத்தான்’ என்றுகூறி, இருவரும் தம் விருப்பத்தால் தாமே உடன் சென்றனர் என்பது தோற்ற, ‘இவ் இருவோரொடும்’ என்று அவர்கள் இருவரையும் குறித்தாள். 59 |