பரதன் துன்பத்தில் ஆழ்தல் 2161. | ‘வனத்தினன்’ என்று, அவள் இசைந்த மாற்றத்தை நினைத்தனன்; இருந்தனன், நெருப்புண்டான் என; ‘வினைத் திறம் யாது இனி விளைப்பது? இன்னமும் எனைத்து உள கேட்பன துன்பம், யான்?’ என்றான். |
‘வனத்தினன்’ - (இராமன்) காட்டில் உள்ளான்; என்று -; அவள் இசைத்தமாற்றத்தை - கைகேயி சொன்ன சொல்லை; நினைத்தனன் - (மனத்தில்) எண்ணிஎண்ணிப் பார்த்து; நெருப்பு உண்டான் என - நெருப்பை விழுங்கியவனைப் போல; இருந்தனன் - (செயலற்று, மயக்குற்று) இருந்து; (தனக்குத் தானே) ‘வினைத்திறம் -என் தீவினையின் கூறுபாடு; இனி விளைப்பது யாது - இனிமேலும் எனக்கு உண்டாக்க இருப்பது எத்தகைய தீமையோ?; இன்னமும் - மேலும்; யான் கேட்பன துன்பம் - யான் கேட்கவேண்டுவனவாகிய துன்பங்கள்; எனைத்து உள - எத்துணை உள்ளனவோ;’ என்றான் -. மிகக் கொடிய செய்திகள் (தந்தை இறந்தமை, இராமன் காடு சென்றமை) இரண்டை முதற்கண்கேட்டதனால் உண்டாகிய அதிர்ச்சியும், துயரமும் பரதனைத் தாக்கின, அதனால், அவன் பயந்து இதனினும் கொடிய துன்பங்கள் எவை கேட்க நேருமோ என்று கூறினான். கேட்ட செய்தியினும் கொடியன வேறில்லையாயினும் ஒவ்வொன்றாக அறிதலின் பரதனின் அச்சம் மிகுவதாயிற்று. ‘இசைத்த’என்றது இனிமைபடச் சொன்னாள் என்றாகும். 60 |