இராமன் வனம் போய காரணத்தைப் பரதன் வினாவுதல் 2162. | ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல், ‘அப் பூங் கழல் காலவன் வனத்துப் போயது, தீங்க இழைத்த - அதனினோ? தெய்வம் சீறியோ? ஓங்கிய விதியினோ? யாதினோ?’ எனா. |
விம்மலோடு - அமுகையோடு; ஏங்கினன் - ஏக்கம் கொண்டு; இருந்தஏந்தல் - இருந்த பரதன் (கைகேயியை நோக்கி); ‘அப்பூங்கழல் காலவன் - அந்தப்பொலிவமைந்த வீரக்கழலை அணிந்த கால்களை உடையவனாகிய இராமன்; வனத்துப் போயது -காட்டிற்குச் சென்றது; தீங்கு இழைத்த அதனினோ? - பிறர்க்குத் தீமை செய்தஅதனாலா?; தெய்வம் சீறியோ! - தெய்வங்கள் கோபித்ததனாலேயா?; ஓங்கிய விதியினோ - (இவை எல்லாவற்றினும்) மேம்பட்டதாகிய விதியின் விளைவாலேயா?; யாதினோ - வேறு எந்தக் காரணத்தினாலோ?; எனா - என்று கேட்டு..... (அடுத்த பாட்டில்முடியும்) இராமனது திருமேனிநலங்களுள் வனம் போயது திருவடி ஆதலின், அதன் சிறப்பைப் ‘பூங்கழற்காலவன்’ என்று பரதன் எண்ணியது அவன் மனநிலையைப் புலப்படுத்தி அழகு செய்கிறது. எல்லாம் விதியின் விளைவாகவும் தனக்குத் தெரிந்தசிலவற்றை எடுத்துச் சொல்லி வினாவி, சொல்லாதவற்றை விதியில் அடக்கினான் எனக் கொள்க.செருக்கினால் தன்னளவறியாது கொடுமை செய்யத் தூண்டுவது ‘விதி’ என்றார் எனலும் ஆம்.தீத்தொழில் செய்யும் அரசகுமாரரைக் காட்டிற்கு ஓட்டுதல் சூரிய குல வழக்கம். அசமஞ்சன் என்ற அரசகுமாரன் தீய செய்தமையாற் காட்டிற்கு விரட்டப்பட்டான். அது கருதியே! ‘தீங்கு இழைத்தஅதனினோ’ என்றான் பரதன். 61 |