2163. ‘தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

     ‘இராமனே - இராமபிரானே; தீயன செய்யுமேல் - தீய செயல்களைச்
செய்வானாயின்; அவை - அச் செயல்கள்; தலத்து  உளோர்க்கு
எல்லாம்
-இப்பூமியின்கண் உள்ள எல்லார்க்கும்; தாய் செயல்
அல்லவோ - தாய் (தன்குழந்தையின் உடல்நலம் பேணும்பொருட்டுச்
செய்யும்) செயல் போன்றது அல்லவா? (இனி); போயது - (இராமன் வனம்)
சென்றது; தாதை விண் புக்க பின்னரோ? - தந்தையாகியதயரதன்
விண்ணுலகு சென்ற பிறகா (இறந்த பிறகா);  ஆயதன் முன்னரோ? -
அவன் விண்ணுலகுசேறற்கு முன்னமேயா (உயிருடன் இருக்கும் போதேயா);
அருளுவீர் - சொல்லி அருளுக;’ என்றான் -.

     இராமன் தீமை செய்ததனால் வனம் போயிருக்க மாட்டான். இராமன்
செய்கிற தீமைகள்தாய்செய்யும் தீமைகள் போலப் பார்வைக்குத் தீமைபோல்
தோன்றி உண்மையில் நலம்செய்வதாகும்.  தாய் தன் குழந்தையைக் காலில்
இட்டு நெருக்கிக்,  கைகளைப் பிடித்து, வாயைநெருக்கி,  அழ அழப் பால்
ஊட்டுவாள். காண்பார்க்குக் கொடுமை போல் தோன்றும்; உண்மையில்
பாலை உண்பித்தலாகிய நற்செயல் அது ஆகும்.  அதுபோன்றதே இராமன்
செயலும்; ஆதலின் ‘தீங்குஇழைத்த அதனினோ’ என்று இராமன் திறத்து
நினைத்தலும் தகாது என்றானாம். அருளுவீர்’ என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
இரு கொடுமைகளைக் கவல்வின்றி இசைத்தது அறிந்தான் ஆதலின்இவ்வாறு
கூறினான்.                                                    62