கைகேயியின் மறுமொழி 2164. | ‘குருக்களை இகழ்தலின் அன்று; கூறிய செருக்கினால் அன்று; ஒரு தெய்வத்தாலும் அன்று; அருக்கனே அனைய அவ் அரசர் கோமகன் இருக்கவே, வனத்து அவன் ஏகினான்’ என்றான். |
‘(இராமன் காடுபோயது) ‘குருக்களை - பெரியோரை; இகழ்தலின் அன்று -பழித்ததனால் அன்று; கூறிய- முன்பு நீ கூறிய; செருக்கினால்- அளவின்மிக்க கர்வச் செயலாலும் அன்று; ஒரு தெய்வத்தானும்அன்று- ஓர் தெய்வக்குற்றத்தால் அத்தெய்வம் சீறியதாலும் அன்று; அருக்கனே அனைய -சூரியனையே ஒத்த (நேர்மை தவறாத); அவ்அரசர் கோமகன் - அந்தச்சக்கரவர்த்தியாகிய தயரதன்; இருக்கவே - உயிருடன் இருக்கின்ற போதே; அவன் வனத்துஏகினான்’-இராமன் காட்டுக்குச் சென்றான்;’ என்றாள் -. முன்பு பரதன் வினாவில் வந்த மூன்று காரணங்களையும் அன்று என மறுத்தாள் கைகேயி. ‘குருக்களை இகழ்தல்’ -‘தீங்கு இழைத்த அதனினோ’ என்பதுடுனும், ‘ஒருதெய்வத்தால்’ என்பது ‘தெய்வம் சீறியோ’ என்பதுடனும், ‘செருக்கினால்’ என்பது ‘ஓங்கியவிதியினோ’ என்பதுடனும் பொருந்துமாறு அறிக. வாய்மை தவறாதவன் தயரதன்; தன் உயிர் போய்விடும் என்பது தெரிந்தும் கைகேயிக்குவாக்குத் தவறாமல் வரம் கொடுத்தவன் ஆதலால், ‘அருக்கனே அனைய’ என்று தயரதனை இங்குக்கூறினாள். பரதன் கேட்ட வினாக்களின் அளவே கைகேயி பதில் உரைக்கிறாள்; மேற்கொண்டுதானாக எதுவும் சொல்லாதில்லை; ஏன்? பரதன்பால் தான் செய்த செயலை உடன் தெரிவிப்பதில்எழுந்த அச்சமே ஆகும். 63 |