பரதன் மறுபடியும் கைகேயியை வினாவுதல்  

2165.‘குற்றம் ஒன்று இல்லையேல், கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல், தெய்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே, பிள்ளை கான்புக
உற்றது என்? தெரிதர உரைசெய்வீர்.’ என்றான்.

     ‘குற்றம் ஒன்று இல்லையேல் - இராமன் பிறருக்குச் செய்த தீங்கு
ஒன்றும்இல்லையாக இருக்குமானால்;  வேறு உளோர் கொதித்து
செற்றதும் இல்லையேல்
- இராமனுக்குவேறாக உள்ள பகைவர் மனம்
வெம்பி வலியை அழித்ததும் இல்லையானால்; தெய்வத்தான் அன்றேல் -
தெய்வக் குற்றத்தினாலும் விளைந்தது இல்லையானால்; பெற்றவன்
இருக்கவே
- தன்னைப்பெற்ற தந்தை தயரதன் உயிரோடிருக்கும் பொழுதே;
பிள்ளை கான் புக உற்றது என் - அவன்மகனாகிய இராமன் காடு
செல்லும்படி நேர்ந்ததற்குக் காரணம் யாது?; தெரிதர - நன்கு விளங்கும்படி;
உரைசெய்வீர்! - சொல்வீராக;’ என்றான் -.

     வேறு எக்காரணமும் இல்லை என்னும்போது தந்தை இருக்கும்போது
மகன் காடுசென்றதனால் பரதன்காரணம் கேட்டு வினாவ வேண்டுவதாயிற்று.
‘பின் அவன் உலந்தது என்’ என்று ஒரு பாடம் ‘தெரிதரஉரை செய்வீர்’
என்ற பகுதிக்கு உண்டு. மகன் காடு சென்ற பின் தந்தையாகிய தயரதன்
இறந்ததற்குக் காரணம் என்ன? என்று பரதன் வினாவினன் என்பர். மகன்
காடு சென்றதேதந்தையின் இறப்புக்குக் காரணமாகிவிடுதலின், வேறு
காரணம் வினாவி அறிய வேண்டுவதின்று என்க.                     64