2168.துடித்தன கபோலங்கள்; சுற்றும் தீச் சுடர்
பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது;
மடித்தது வாய்; நெடு மழைக் கை, மண் பக
அடித்தன, ஒன்றொடு ஒன்ற அசனி அஞ்சவே.

     சுபோலங்கள் - கன்னங்கள்; துடித்தன - துடித்துக்கொண்டிருந்தன;
மயிர்த் தொளை - மயிர்க்கால் கண்களில்;  சுற்றும் - எப்பக்கமும்;
தீச்சுடர் - நெருப்புப் பொறிகள்; பொடித்தன - அரும்பின; புகையும்
போர்த்தது
- புகை கிளம்பி (நாற்புறமும்) மூடிற்று; வாய் மடித்தது - வாய்
மடித்துக்கொண்டது; மழை நெடுங்கை - மழை போன்ற வள்ளன்மையுடைய
நீண்ட கைகள்; அசனி அஞ்ச - இடியும் அஞ்சும்படி (பெரிய ஒலி
உண்டாகும்படி); மண்பக ஒன்றொடு ஒன்றுஅடித்தன - பூமி வெடிக்கும்படி
ஒரு கையோடு ஒரு கை மோதி அடித்தன.

     கன்னம் துடித்தல், மயிர்க்கால் மூலம் வெப்பம் பரவல், வாய் மடித்தல்,
கையை அடித்தல் சினத்தின் அறிகுறிகளாம். ‘ஏ’ ஈற்றசை.              67