2169.பாதங்கள் பெயர்தொறும், பாரும் மேருவும்,
போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே.

     பாதங்கள் - (சினங்கொண்ட  பரதனது) கால்கள்; பெயர்தொறும் -
தரையில்  மாறிமாறி வைக்கப்படுந்தோறும்; பாரும் மேருவும் - மண்ணும்
மேரு மலையும்; மாதங்கம் வரு கலம் -யானையை ஏற்றிவருகிற மரக்கலம்;
கால் பொர - (கழற்)காற்று மோத; போதம் கொள் - கலத்தைச்
செலுத்தும் அறிவைத் தன்பாற் கொண்ட;  தனி நெடும் பொரு இல்
கூம்பொடு
- தனித்த நீண்ட ஒப்பற்ற பாய்மரத்துடனே; மறுகி- சுழன்று;
ஓதம் கொள் கடலினின்று - நீர்ப்பெருக்கைக் கொண்ட  கடலிலிருந்து;
உலைவ போன்ற - தடுமாறி வருந்துவ போன்ற.

     யானை யேற்றிய கலம் பாய்மரத்தோடு காற்றால் கடலில்
நிலைதடுமாறல், மேருமலையோடும கூடியபூமி பரதன் பாதம் பெயர
நிலைதடுமாறலுக்கு உவமை ஆயிற்று. யானை - மேரு,  மரக்கலம் - பூமி,
பரதன் பாதம் - பாய்மரம் என ஒப்புரைக்க. கப்பலைத் திசையறிந்து காற்றின்
போக்கறிந்து செலுத்துவது பாய்மரம் ஆதலின் “போதங் கொள் கூம்பு”
என்றார்.                                                     68