பரதன் கைகேயியைக் கடிந்து பழித்துரைத்தல்  

2172.‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?

    ‘நின் கொடும் புணர்ப்பினால்- உன்னுடைய கொடிய சூழ்ச்சியால்;
எந்தை மாண்டனன் - என் தந்தை தயரதன் இறந்தான்;என் தம்முன்
மாதவம் பூண்டனன்
- என் தமையன் பெருந்தவத்தை மேற்கொண்டான்
(காட்டுச்குச் சென்றான்);  என்றால் - (இத்தகைய கொடிய நிகழ்ச்சிகள் நின்
வாயால்விளைந்தன) என்றால்;  வாய் கீண்டிலென் - (கொடி வரம் கேட்ட
உன்னுடைய) வாயைக்கிழித்தேனில்லை; அது கேட்கும் - (வரம்பெற்றேன்
என்ற) உன் சொல் கேட்கும்; நின்ற - இறவாது  நின்ற; யான் -; அரசை-
(நீ வாங்கிய) இராச்சியத்தை; ஆசையால் ஆண்டனெனே அன்றோ -
பேராசையால் ஆட்சிபுரிந்தவன் ஆவனே யல்லவா?’

     மறுக்காதது  உடன்பட்டதாகும்  என்னும் வழக்குப்படி வரம் கேட்ட
தாயின் வாயைக்கிழிக்காமையால் தானம் அதற்கு உடன்பட்டதாக  உலகம்
நினைக்க இடம்தரும் என்பதால்,‘ஆண்டனெனே அன்றோ அரசை”
என்றான். தான் உடன்பட்டதாக உலகம் கருத நின்றதாகத் தன்னைப்
பழித்துக் கூறிக்கொண்டு தாயைப் பழித்தான். புணர்ப்பு - சூழ்ச்சி.
‘ஆண்டனெனே’ என்பதில்உள்ள ‘ஏ’ தெளிவுப் பொருட்டு.            71