2173.‘நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
“ஏ” எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
“தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?

     ீ - (வரம் கொண்ட) நீயும்; இனம் இருந்தனை - இன்னமும்
உயிரோடுஇருந்தாய்; யானும் நின்றனென் - யானும் உன்னெதிரில் சும்மா
நின்று கொண்டுள்ளேன்;‘ஏ’ எனும் மாத்திரத்து - ‘ஏ’ என்று
சொல்லக்கூடிய கால அளவுக்குள்; எற்றுகிற்றிலென் - (உன்னை) அடித்து
வீழ்த்தவில்லை; (இதற்குக் காரணம்) ஆயவன்முனியும் என்று
அஞ்சினேன்
- (உலகுக்கெல்லாம்) தாய் போன்ற இராமன் கோபிப்பான்
என்றுகருதிப் பயந்தேன்; அலால் - அல்லாமல்; ‘தாய்’ எனும் பெயர் -
உனக்கு என்னுடைய தாய் என்று  ஒரு பெயர் உள்ளதே அது; எனைத்
தடுக்கற் பாலதோ
- என்னை(உன்னை அடித்து  வீழ்த்தாமல்) தடுக்க
வல்லமை உடையதோ?’

    நீ பிழை செய்தாய்; உன்னைத்தண்டிக்க வேண்டியவன் யான்;
அப்படியிருந்தும் உன்னைத்தண்டியாதது ‘தாய்’  என்பதால் அன்று,
இராமனுக்கு அஞ்சியே ஆகும்; ஆகவே, எந்த இராமனைக் காட்டிற்கு
அனுப்பினாயோ அவனால் தான் இன்று நீஉயிரோடிருக்கின்றாய் என்றான்
பரதன். ‘தாய் எனும் பெயர்’ என்றது தாய் என்பது உனக்குப்பெயரளவில்
தான் பொருந்தும்;  பொருள் அளவில் அச்சொல்லுக்கு நீ சிறிதும்
தகுதியற்றவள்.சொற்கள் பொருள் உணர்த்தும் வழிதான் ஆற்றல் உடையன;
பொருள் உணர்த்தாத வழி ஆற்றல்அற்றன.  எனவே,  உனக்குரிய ‘தாய்’
என்பதும் எனைத் தடுக்கும் ஆற்றல் உடையதன்று என்பதும் ஒருகருத்து.
‘ஓ’ வினாப்பொருட்டு.                                         72