கலித்துறை 2177. | நோயீர் அல்லீர்; நும் கணவன்தன் உயிர் உண்டீர்; பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே? மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்! தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே! |
‘நும் கணவன் தன் உயிர் உண்டீர் - உம் கணவனது உயிரைக் குடித்தீர்; (ஆயினும்) நோயீர் அல்லீர் - நோய் போன்றவர்அல்லீர்; நீர் பேயீரே - நீர் பேய் போன்றவரே; (இத்தகைய நீர்) இன்னம்இருக்கப் பெறுவீரே - (கணவன் இறந்த பிறகும்) இன்னமும் உயிருடன் வாழ்வதற்குரியவர்ஆவீரே? (உரியரல்லீர்); மாயீர் - இறந்து போக மாட்டீர்; முலை தந்தீர் -(குழந்தையாய் இருந்தபொழுது) பால் கொடுத்த வளர்த்தீர்; தாயீரே நீர்- (ஆகையால்)நீர் என் தாயார்தான்; மாயா வன்பழி தந்தீர்- (இளைஞனாய் இருக்கும்பொழுது) அழியாத கொடும்பழி கொடுத்து என்னைக் கெடுத்தீர்; இன்னம் - எதிர்காலத்தில்; எனக்கு -; என் தருவீர் - என்ன தரப்போகின்றீர்?’ நோய் சிலநாள், இருந்து உயிர் கொல்லும், கணவன் உயிரை உடனே கொன்றாள் ஆதலின்பேய் போன்றாள் என்றான். பழி தந்தீர்; முலை தந்தீர்; இன்னம் என் தருவீர்! என்பதுஇகழ்ச்சி செய்து வினாயது. ‘மாயீர்’ என்பதற்குச் சாகமாட்டீர்; மற்றவர்கள் எல்லாம்சாவைத் தழுவ நீர்மட்டும் சாகாமல் இருப்பீர் என்று அவளது கொடுமையின் மிகுதியைக்காட்டினான். ‘ஏ’ ஈற்றசை. 76 |