2179.‘இறந்தான் தந்தை,
     “ஈந்த வரத்துக்கு இழிவு” என்னா,
“அறந்தான் ஈது” என்று,
     அன்னவன் மைந்தன், அரசு எல்லாம்
துறந்தான்; “தாயின் சூழ்ச்சியின்,
     ஞாலம், அவனோடும்
பிறந்தான், ஆண்டான்” என்னும்
     இது, என்னால் பெறலாமே?

     ‘தந்தை - தயரதன் என்கிற தகப்பன்; “ஈந்தவரத்துக்கு இழிவு”
என்னா
- தான் முன் கொடுத்த வரத்துக்கு இழிவு நேர்ந்து விடுமோ
(உயிரோடு இருந்தால்) என்று கருதி; இறந்தான் - உயிரொழிந்தான்;
அன்னவன் மைந்தன்- அந்தத் தந்தையின் புதல்வன்; ஈது அறந்தான்
என்று
- இதுவே அறநெறியாகும் என்றுகருதி; அரசு எல்லாம் துறந்தான்-
அரசை முற்றும் வேண்டாம் என்று காடு சென்றான்;(இவ்வாறு இருவரும்
உலகம் போற்றும் செயலில் தலைநிற்க); அவனோடும் பிறந்தான் -அந்த
இராமனோடு உடன் பிறந்தவனாகிய பரதன்;  தாயின் சூழ்ச்சியின் - தன்
தாய்செய்த சூழ்ச்சியால்; ஞாலம் ஆண்டான் என்னும் இது - உலகத்தை
எல்லாம் ஆண்டான்என்கின்ற இப்பழிச்சொல்; என்னால் பெறல் ஆமே -
என்னால் பெறுதற்குப்பொருந்துமோ?’

     கொடுத்த வரத்தை நிலைநிறுத்த இறந்தான் தந்தை; தந்தை சொல்லைக்
காப்பாற்ற அரசுதுறந்து வனம் புகுந்தான் மகன். உடன் பிறந்தவன் அரசைக்
கைப்பற்றி ஆண்டான் என்னும் பழிநான் பெறுதற்குரியதோ? அதையன்றோ
நீ செய்தாய் என்றாளாம்.                                        78