2180.‘“மாளும்” என்றே தந்தையை உன்னான்;
     வசை கொண்டாள்
கோளும் என்னாலே எனல்
     கொண்டான்; அது அன்றேல்.
மீளும் அன்றே? என்னையும்,
     “மெய்யே உலகு எல்லாம்
ஆளும்” என்றே போயினன் அன்றோ?-
     அரசு ஆள்வான்.

   ‘அரசு ஆள்வான்-அரசாட்சியைச் செய்தற்கு உரிய முறையுடைய
இராமன்;  “மாளும்” என்றே தந்தையை உன்னான் -(தான்
காட்டிற்குச்சென்றால்) இறந்துபடுவான் தந்தை என்று கருதவில்லை;
வசைகொண்டாள் -பழிச்சொல்லைக் கொண்டவளாயகைகேயியின்;
கோளும் - மாறுபட்ட எண்ணமும்; என்னாலே-பரதனாகிய என்
தூண்டுதலினாலேயே விளைந்தது; எனல்- என்றுகருதுதலை; கொண்டான்-
உடையன் ஆனான்; என்னையும் -; “மெய்யே- உண்மையாக (உறுதியாக)
உலகு எல்லாம்ஆளும்” - உலகையெல்லாம் (இப்பரதன்) ஆள்வான்;
என்றே போயினன் அன்றோ  - என்றுகருதியே(தந்தை இறப்பவும்
பொருட்படுத்தாது) காட்டிற்குப் போனான் அல்லவா?; அது அன்றேல்-
அப்படி இராமன் கருதவில்லையேல்; மீளும் அன்றே - அந்தை இறந்தவுடன்
திரும்பி வந்திருப்பான்அல்லவா?;’

     தந்தையின் வாக்கைக் காப்பாற்றக் காடு சென்ற இராமனைப் பரதன்
சந்தேகிக்கிறான்என்பதன்று;  தன்னுடைய துன்ப மிகுதியால்  “இப்படியோ,
அப்படியோ” என்று தன்மேல் பழியைப்போட்டுக்கொண்டு பலவாறு
நினைக்கின்றான் என்பதே இத்தகைய இடங்களில் பொருளாகும். அரசுக்கு
உரியவனும், இனி எதிர்காலத்தில் ஆள்பவனும், இராமன் என்பதில்
பரதனுக்கு மாறாத உறுதிஇருப்பதால் ‘அரசு ஆள்வான்” என்றே
இராமனைக் கூறினான்பரதன்.                                   79