2181. | ‘ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால் யாதானும் தான் ஆக; “எனக்கே பணி செய்வான், தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன்” என்னப் போதாதோ, என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா? |
‘ஓதா நின்ற தொல்குல மன்னன்- (யாவராலும் பாராட்டிப் பேசப்படாநின்ற பழமையான சூரியகுல மன்னனாகிய தயரதன்; உணர்வு- எண்ணம்; அப்பால் - பிறகு; யாதானும் தான் ஆக - எதுவாகவாவது இருக்கட்டும்,(அதுகிடக்க); ”எனக்கே பணி செய்வான் அவன் - எனக்கே தொண்டுகள் செய்துகொண்டிருப்பவனாகிய பரதன்; தீதா நின்ற சிந்தனை செய்தான் - (என்னை வனம்அனுப்பித் தான் அரசு ஆளும்) கொடியதான எண்ணத்தைக் கொண்டான்; என்ன - என்று அந்தஇராமன் கருதுதற்கு; என் தாய் இவள் கொண்ட பொருள் - என் தாயாகிய இக்கைகேயி வரத்தின் மூலம் பெற்ற பொருளாகிய இவ்வரசு; போதாதோ -;’ கைகேயி பரதனுக்காகஅரசு பெற்றபடியால், அதுவே பரதனை இராமன்தவறாகக் கருதுதற்குக் காரணம் ஆகிவிடும். அது ஒன்றே போதும் பரதன் மேல் இராமன் வருத்தம்கொள்ளக் காரணம். ‘தந்தை எவ்வாறியிருப்பினும் நம் தொண்டனாக இருந்தஇந்தப் பரதன் தீய எண்ணம் கொண்டிருப்பவனாக இருந்திருக்கிறானே’ என்று இராமன் நினைத்துவிடப் போதிய காரணம் இந்த அரசே என்றான் பரதன். அம்மா - ஐயோ பாவம்என்றார்போல் இரக்கக் குறிப்பு. 80 |