2182.‘உய்யா நின்றேன் இன்னமும்;
     என்முன் உடன் வந்தான்,
கை ஆர் கல்லைப் புல் அடகு
     உண்ண, கலம் ஏந்தி,
வெய்யோன் நான் இன் சாலியின்
     வெண் சோறு, அமுது என்ன,
நெய்யோடு உண்ண நின்றது,
     நின்றார் நினையாரோ?

    ‘என்முன் உடன் வந்தான்- எனக்கு மூத்தவனும் உடன் பிறந்த
சகோதரனும் ஆகிய இராமன்;  கை ஆர் கல்லை -கையில் பொருந்திய
இலையாகிய கலத்தில்;  புல் அடகு உண்ண - அற்பமான இலை உணவை
உண்டுகொண்டிருக்க; இன்னமும்-; வெய்யோன் நான் - கொடியவனாகிய
நான்; உய்யாநின்றேன் - உயிர் பிழைத்திருக்கின்றேன்; (அம்மட்டோ)
கலம் - நல்ல பாத்திரத்திலே(உண்கலத்திலே) இன் சாலியின்
வெண்சோறு
- இனிய உயர்ந்த நெல்லின் வெள்ளியசோற்றை; நெய்யோடு-
நெய்யுடன்; அமுதென்ன - தேவரமுதம் என்னும்படி; ஏந்தி - சுமந்து;
உண்ண நின்றது  - உண்ணும்படி இருந்து  கொண்டுள்ளதை;  நின்றார் -
அருகில் காண நிற்கும் உலகோர்; நினையாரோ? - என்னை இழிவாகக்
கருதமாட்டாரோ?’

     உயிருடன் இருப்பதே உலகம் தூற்றப் போதும்; அதன்மேல்
உண்கலத்தில் சோறும் நெய்யும் அமுதென உண்ண நிற்றல் உலகோர் பழி
தூற்ற மேலும்வாய்ப்பன்றோ என்று தன்னைத் தானே நொந்துகொள்கிறான்.
‘ஓ’ வினாப்பொருள். கை ஆர்கல்லை - கையாகிய பாத்திரம் எனவும் ஆம்.
கல்லை - இலை முதலியவற்றைக் குழித்து உண்னுதற்காகச் செய்த பாத்திரம்;
தொன்னை. இராமன் காட்டிலே இலை முதலியவற்றை  உண்டுகொண்டு
எப்படியிருக்கிறானோ என்று அவன்பால் கொண்ட அன்பிரக்கமும் காண்க.
2391: