2183. | ‘ “வில் ஆர் தோளான் மேவினன், வெங் கானகம்” என்ன, நல்லான் அன்றே துஞ்சினன்; நஞ்சே அனையாளைக் கொல்லேன், மாயேன்; வன் பழியாலே குறைவு அற்றேன் - அல்லேனோ யான்! அன்பு உடையார்போல் அழுகின்றேன். |
‘நல்லான் - நல்லோனாகிய தயரதன்; “வில் ஆர் தோளான் - வில் அமைந்ததோளை உடையவனாகிய இராமன்; வெங்கானகம் மேவினன்” என்ன - கொடிய காட்டை அடைந்தான், என்று சொல்லிய அளவிலேயே; அன்றே துஞ்சினன் - அன்றைக்கே இறந்துபட்டான்; யான் -; நஞ்சே அனையாளைக் கொல்லேன் - விடத்தை ஒத்தவளாகியகைகேயியைக் கொல்லவில்லை; மாயேன் - (நடந்த நிகழ்ச்சிகளுக்கு நானும் ஒருவகையில் காரணமானதை அறிந்தும்) இறந்து ஒழியேன்; அன்பு உடையார்போல் அழுகின்றேன் -தயரதனிடத்தும், இராமனிடத்தும் அன்புடையவர்போலப் பெரிதாகத் துக்கப்படுகின்றேன்; வன்பழியால் குறைவு அற்றேன் அல்லேனோ - கொடும் பழியால் ஒரு சிறிதும் குறைவு இல்லாதவன் அல்லவா? (பெரும்பழி நிரம்பப் பெற்றவன்.)’ தன்னைத் தானே இகழ்ந்துகொள்வது இப்பாடலில் பரதன் கூற்று. ‘வன் பழியால் குறைவுஇல்லாதவனவல்லவா’ என்று கூறுவதுபோலத் தோன்றி, யான் எல்லாப் பழியும் நிரம்ப உடையன்என்பதைக் குறிப்பாகச் சொல்கிறது. அவலத்தின் உயர்நிலையில் இங்ஙனம் கூறுவதுண்டு. ‘நல்லான்’ என்று தயரதனைக் குறிப்பிட்டபடியால், இவன் ‘தீயான்’ என்று தன்னைக் கருதியதாகக்கொள்ளலாம். 82 |