2184. | ‘பாரோர் கொள்ளார்; யான் உயிர் பேணிப் பழி பூணேன்; தீராது ஒன்றால் நின் பழி; ஊரில் திரு நில்லாள்; ஆரோடு எண்ணிற்று? ஆர் உரைதந்தார்? அறம் எல்லாம் வேரொடும் கேடு ஆக முடித்து, என் விளைவித்தாய்? |
‘(யான் அரசு நடத்துவதை) பாரோர் கொள்ளார் - இந்த நாட்டில் உள்ளவர்கள்ஏற்றுக்கொள்ளமாட்டார்’ யான் உயிர் பேணிப் பழி பூணேன் - யான் உயிரைப்பாதுகாத்துப் பழியை அணிந்துகொள்ள மாட்டேன்; ஒன்றால் நின் பழி தீராது - இனிஎந்தக் காரியம் செய்தாலும் நீ உண்டாக்கிய பழி விலகாது; திரு ஊரில் நில்லாள் -(முறை திரும்பியதால்) இனித் திருமகள் இவ்வூரில் இருக்கமாட்டாள்; ஆரோடு எண்ணிற்று- (இச்செயலைச் செய்ய) யாரோடு ஆலோசித்தாய்?; உரை தந்தார் ஆர் - (உனக்குஆலோசனை சொல்லியவர் யாவர்?; அறம் எல்லாம் வேரொடும் கேடு ஆக முடித்து என்விளைவித்தாய் - அறம் அனைத்தும் அடியோடு அழியும்படியான செயலைச் செய்து நிறைவேற்றி என்ன கொடுமைகளை யெல்லாம் செய்துவிட்டாய்?’ தனக்கு அரசில்சிறிதும் விருப்பம் இல்லை என்பதை முன்னர்க் கூறியுள்ளான் ஆதலின், அப்படிச் கட்டாயப்படுத்தி என்னை அரசேற்க நீ செய்தாலும் உலகோர்ஒப்புக்கொள்ளமாட்டார் என்றான். கைகேயியின் இயல்புக்கு இத்தகைய செயல்செய்யும் துணிவு ஒத்துவராது என்பதை உணர்ந்த மகன் பரதன் “ஆரோடு எண்ணிற்று, உரைத்தார்ஆர்” என்று இங்கே வினாவினான். யாரோ தன் தாயின் மனத்தைக் கெடுத்துள்ளார் என்று இப்போதுபரதன் நினைக்கத் தொடங்கியுள்ளான் என்பது தெரிகிறது. ‘யார்’ என்பது செய்யுளின்பம்நோக்கி ‘ஆர்’ என்று நின்றது. 83 |