2185. | ‘கொன்றேன், நான் என் தந்தையை, மற்று உன் கொலை வாயால் - ஒன்றோ? கானத்து அண்ணலை உய்த்தேன்; உலகு ஆள்வான் நின்றேன்; என்றால், நின் பிழை உண்டோ? பழி உண்டோ? என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ? |
‘நான்-; உன் கொலை வாயால்- உன்னுடைய கொலைத் தன்மை படைத்த வாய்ச் சொல்லைக் கொண்டு; என் தந்தையைக்கொன்றேன் - என் தந்தையாகிய தயரதனைக் கொன்றுவிட்டேன்; ஒன்றோ?-அம்மட்டோ; மற்று- மேலும்; அண்ணலை- தலைமையும் பெருமையும் சிறந்த இராமனை; கானத்து உய்த்தேன் - காட்டின் கண் அனுப்பிவிட்டேன், (இவ்வளவையும் உன்வாய்ச்சொல் மூலம் செய்துவிட்டு); உலகு ஆள்வான் நின்றேன் - இவ்வயோத்திஅரசை ஆள்வதற்குத் தயாராக இருக்கின்றேன்; என்றால்-; நின் பிழை உண்டோ - உன்குற்றம் ஏதேனும் உள்ளதோ?; பழி உண்டோ - உன்மேல் பழி ஏதேனும் உள்ளதோ? (எல்லாக் குற்றமும், எல்லாப் பிழையும் என்மேல்தான்); என் பழி மாயும் இடம் - என்பழி அழிந்து போகுமிடம்; என்றேனும் தான் உண்டோ? - என்றைக்காவது உண்டா? (என்றும்இல்லை.)’ கைகேயி செய்தன அனைத்தும் தான் செய்தனவாகக் கூறினான்; செய்ததால் விளைந்த பயனாயஅரசை இவன் ஏற்பவனாக இருக்கும் நிலைபற்றி, தன்னை நோக்கித்தான் இவ்வளவும் நடந்ததாகஉலகம் அறிந்து தூற்றும் என்று பரதன் வருந்துவது இப்பாட்டில் கூறியவற்றின் கருத்தாகும். ‘என்பழி’ என்றது. ‘என்பிழை என்பதற்கும் பொருந்தும். 84 |