2186. | ‘கண்ணாலே, என் செய் வினை, இன்னும் சில காண்பார்’ மண்ணோர் பாராது எள்ளுவர்; வாளா பழி பூண்டாய்; “உண்ணா நஞ்சம் கொலிகிலது’ என்னும் உரை உண்டு” என்று எண்ணாநின்றேன்; அன்றி இரேன், என் உயிரோடே. |
‘என் செய் வினை - ‘இனி யான் செய்ய இருக்கும் செயல்திறத்தை; இன்னும்சிலர் கண்ணாலே காண்பார் - என்னை அறியாத வேறுசிலரும் தம் கண்ணாலேயேகாணப்போகிறார்கள்; மண்ணோர்பாராது எள்ளுவர் - மண்ணிலுள்ளவர் எதிர்காலத்தில்நடப்பதை எண்ணிப் பாராது தற்போது இகழ்வர். (அது இயல்பே); வாளா - ஒரு பயனும் இன்றி; பழி பூண்டாய் - பழியைமட்டும் மேலிட்டுக் கொண்டாய்; “உண்ணா நஞ்சம் கொல்கிலது”- தான் உண்ணாத விடம் அவனைக் கொல்லாது; என்னும் உரை உண்டு - என்கின்ற பழமொழிஉலகில் உள்ளது; என்று எண்ணா - எனக் கருதி; நின்றேன் - (உயிரோடு)இருக்கின்றேன்; அன்றி - (அப்படி நான் செய்யாதவற்றுக்கும் என்மேல் பழிவரும்என்று ஆகுமானால்); என் உயிரோடே இரேன் - என் உயிரோடு நான் இதுகாறும் இருந்திருக்க மாட்டேன், இறந்து போயிருப்பேன். கைகேயி எதிர்பார்த்தவாறு பரதன் அரசு ஏற்கப்போவது இல்லை என்பது திடமாய்விடலின், ‘வீணாகப் பழிபூண்டாய்’ என்றான். பழிதான் மிச்சம்; பயன்சிறிதும் இல்லை. தற்போது என்னைப்பற்றிய உண்மை அறியாது இகழ்கிற சிலரும்எதிர்காலத்தில் கண்ணால் என் செய்வினை கண்டு புரிந்துகொள்வர் என்றானாகவும் கொள்க.‘உண்ணா நஞ்சம் கொல்கிலது’ பழமொழி. “உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு” (9921.) என்றஇடத்திலும் இப்பழமொழி எடுத்தாளப்பெற்றது காண்க. ‘என் பழி எதிர்காலத்தில்நீங்கிவிடும். உன் பழி என்றும் நீங்காது’ என்றான் கைகேயியிடம் பரதன். இதுவரை தன்மேல்பழியை ஏறட்டுப் பேசியவன் இப்போது சிறிது தெளிந்து பேசுவதாகக் கொள்ளலாம். ‘ஏ’ஈற்றசை. 85 |