பரதன் கைகேயிக்கு இறுதியாகக் கூறிய அறிவுரை 2188. | ‘சிறந்தார் சொல்லும்நல் உரை சொன்னேன்; செயல் எல்லாம் மறந்தாய் செய்தாய் ஆகுதி; மாயா உயிர் தன்னைத் துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி; உலகத்தே பிறந்தாய் ஆதி; ஈது அலது இல்லைப் பிறிது’ என்றான். |
‘சிறந்தார்-அறிவாற் சிறந்த சான்றோர்; சொல்லும் நல் உரை சொன்னேன் - சொல்லுகின்றநல்ல மொழிகளை உனக்கு எடுத்துச் சொன்னேன்; செயல் எல்லாம் - (இதுகாறும் நீ செய்த)செயல்கள் எல்லாவற்றையும்; மறந்தாய் செய்தாய் ஆகுதி - (புத்தித் தெளிவோடு அன்றி)நினைவின்றிச் செய்தவளாவாயாக; (இவ்வாறு கருதுவது மன்னிப்புப் பெற வாய்ப்பாகும்); மாயாஉயிர்தன்னை - அழியாதிருக்கின்ற உன்னுடைய உயிரை; துறந்தாய் ஆகில் -விட்டுவிட்டாயானால்; தூயையும் ஆதி - தூய்மை உடையவளாகவும் உலகால் கருதப் படுவாய்;உலகத்தே பிறந்தாய் ஆதி - உலகிற் பிறந்ததனால் வரும் பயனைப் பெற்றவளாகவும்ஆவாய்; ஈது அலது பிறிது இல்லை - இது வல்லது உன் பழி தீர வேறு வழி எதுவும் இல்லை;’என்றான் - என்று கூறி முடித்தான். (பரதன்). ‘நான் புத்தியில்லாமல் செய்துவிட்டேன்’ என்று சொல். எனவே, இனிமேல் உன் எண்ணம்புத்தியோடு மாறவேண்டும் என்றான். இறந்து போனால் பெரிதும் பாராட்டடப்படுவாய்; நீபிறந்ததற்கும் ஒரு பொருள் இருக்கும். இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்துகொண்டு அதன்படி செய்த என்றான் பரதன். ஒருவேளை பரதன் அறிவுரை கைகேயியால் ஏற்றுக்கொள்ளப்பெற்றது எனக் கருதலாம். இதன் பின்னர்க் கைகேயி காவியத்தில் உரை நிகழ்த்தவில்லை என்பது காண்க. 87 |