2192.‘அடித்தலம் கண்டிலென் யான், என் ஐயனை;
படித்தலம் காவலன், பெயரற்பாலனோ?
பிடித்திலிர் போலும் நீர்; பிழைத்திரால்’ எனும் -
பொடித் தலம் தோற் உறப் புரண்டு சோர்கின்றாள்.

     தலம்பொடி தோள் உறப் புரண்டு சோர்கின்றான் - மண்ணில்
உள்ள புழுதிதன்தோளிற் படும்படி நிலத்திற் புரண்டு மனம் சோர்ந்தவனாகி;
‘யான் -; என் ஐயனை- என் தலைவனாகிய இராமனது; அடித்தலம் -
திருவடியை;  கண்டிலென் - காணப்பெறவில்லை;படித்தலம்காவலன் -
இப்பூமியாகிய இடத்துக்கு அரசனாகிய இராமன்; பெயரற்பாலனோ?-
இக்கோசல நாட்டைவிட்டுப் பெயர்ந்து செல்லும் தன்மை உடையனோ; நீர்-
(அன்னையாகிய) நீர் (ஆற்றாமையால்); பிடித்திலிர்போலும் - (அவன்
கானகம்செல்லும்போது)
தடுத்தல்செய்து  பிடித்து  வைத்துக் கொள்கிலிர்; 
பிழைத்திர் - பிழை செய்துவிட்டீர்;’ எனும்- என்று  சொல்வானாயினன்.

     இராமனே அரசன் என்பதைக் கோசலைக்கு உறுதிப்படுத்தம் முகமாக,
‘படித்தலம் காவலன்’ என்றுஇராமனைக் குறிப்பிட்டான். ‘பிழைத்திர்’
என்பதற்கு ‘உம்மால் இனி உயிர் வாழ இயலுமோ’என்று கோசலையைக்
கேட்டதாகவும் கொள்ளலாம். ‘ஆல்’ அசை.                         91