2194. | ‘இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ் வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம், “பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால் - மரதக மலை என வளர்ந்த தோளினான். |
மரகத மலை என வளர்ந்த தோளினான்- மரகத மலை போல வளர்ந்த பச்சை வண்ணமான தோளை உடைய பரதன்; ‘பார் இருளை இரதம்ஒன்று ஊர்ந்து நீக்கும் அவ்வரதனில் - இந்த மண்ணில் உள்ள இருட்டை ஒரு தேரினை ஊர்ந்து சென்று அடியோடு போக்கும் அந்த மேன்மையுடைய சூரியனால்; ஒளிபெற மலர்ந்த தொல்குலம் - ஒளிபெற்றுப் பாரம்பரியமாக மலர்ந்து சிறந்த இப்பழமையான அரசகுலம்; ‘பரதன்’ என்று ஒருபழி படைத்தது; - இப்போது பரதன் என்ற பெயரை உடைய ஒரு பழியையும் உண்டாக்கியது;’ என்னும் - என்று சொல்வான். சூரியகுலமாதலின் இங்ஙனம் கூறினான். தன்னைத் தானே நொந்து கொள்வது பரதன் இயல்பு.‘புகழ் படைத்த சூரியகுலம் பழியையும் படைத்தது என்னால்’ என்பது பரதன் துயர் மொழி.‘மரகத’ என்பது செய்யும் எதுகை நோக்கி ‘மரதக’ என எழுந்து முன்பின் ஆயது. ‘ஆல்’ அசை. 93 |