2195. | ‘வாள்தொடு தானையான் வானில் வைகிட, காடு ஒரு தலைமகன் எய்த, கண் இலா நாடு ஒரு துயரிடை நைவதே’ எனும் - தாள் தொடு தடக் கை அத் தருமமே அனான். |
தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்- முழந்தாளைத் தொடுமாறு நீண்ட கைகளை உடைய முழுமுதலாகிய அறத்தினைப் போன்ற பரதன்; ‘வாள் தொடு தானையான் - வாள் ஏந்திய சேனைகளை உடைய தயரதன்; வானில் வைகிட- வானுலகத்தில் தங்கியிருக்க; ஒரு தலைமகன்- அவனது (அரசுக்குரிய); ஒப்பற்றமூத்த மகன்; காடு எய்த - காட்டை அடைய, (அரசு புரிவார் இன்மையால்); கண்இலா நாடு - துன்பம் நீக்குதற்குரிய களைகண் ஆனவரைப் பெறாத நாடு; துயரிடை - துன்பத்தில்பட்டு; நைவதே - வருந்துவதே; எனும் - என்று சொல்லிப் புலம்பும். தயரதனும் இராமனும் நாட்டிற்குக் கண் போல்வார் ஆதலின் அவரை இழந்த நாடு ‘கண் இலாநாடு’ ஆம். முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்க்குரிய உத்தம இலக்கணம். ‘தாழ்தடக் கைகளே’(2104) என்றதை இங்கு ஒப்புநோக்குக. 94 |