2200.‘குரவரை, மகளிரை, வாளின் கொன்றுளோன்,
புரவலன் தன்னொடும் அமரில் புக்கு உடன்
விரவலர் வெரிநிடை விழிக்க, மீண்டுளோன்,
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன்,

    குரவரை- ஐம்பெருங் குரவரை;  மகளிரை - பெண்களை;  வாளின்
கொன்றுளோன் - வாளால் கொலைசெய்தவன்; புரவலன் தன்னொடும் -
அரசனோடும்; அமரில் புக்கு- போர்க்களத்துக்குச் சென்று; உடன்- உடனே;
விரவலர் வெரிநிடை  விழிக்க - பகைவர்கள் தன்முதுகிடத்தைக் காண;
மீண்டுளோன் - திரும்பி ஓடிவந்தவன்; இரவலர் -ஏற்றுண்பாரது;
அருநிதி - அரிதாகச் சேமித்த  செல்வத்தை; எறிந்து வௌவினேன் -
அவர்களை அடித்துக் கைப்பற்றிக் கொண்டவன்...

     ஐம்பெருங்குரவர் ஆவார் - தந்தை, தாய், தம்முன், அரசன்
ஆசிரியன் என்போர்.(ஆசாரக். 16) குரவர் - ஆசிரியர் என்று ‘குரு’ வை
மட்டும் கூறுதலும் உண்டு. போர்க்கு அரசனுடன்சென்று புறமுதுகிட்டு
ஓடிவந்து அரசனைக் கைவிட்டவன். இவனை வள்ளுவர் ‘அமரகத்து
ஆற்றறுக்கும்கல்லாமா அன்னார்’ என்று  சொல்வர் (குறள். 814.).      99