2202. | ‘தாய் பசி உழந்து உயிர் தளரத், தான் தனி, பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும், நாயகன் பட நடந்தவனும், நண்ணும் அத் தீ எரி நரகத்துக் கடிது செல்க, யான். |
‘தாய் பசி உழந்து உயிர்தளர - தன் தாய் பசியால் வருந்தி உயிர் சோரவும்;தான் -; தனி பாய் பெரும் பாழ் வயிறு - ஒப்பற்ற பரந்த பெரிய பாழ்வயிற்றை; அளிக்கும் பாவியும் - (சோறிட்டுப்) பாதுகாக்கின்ற பாவி; நாயகன் பட நடந்தவன்- தன் தலைவன் போர்க்களத்திலே இறந்துபட அவனைக் கைவிட்டுத் தன்னுயிரைக் காத்துக் கொண்டு சென்றவன்; (ஆகிய இப்பதினான்கு பேரும்); நண்ணும் அத் தீ எரி நரகத்து - எந்தநரகத்துக்குச் செல்வார்களோ அந்த நெருப்பு எரிகின்ற நரகத்துக்கு; யான் கடிது செல்க- யான் (அவரினும்) விரைந்து முற்படச் செல்வேனாக. தாய் பசி நீக்க எதையும் செய்யலாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு உடன் களைய வேண்டுவது தாய் பசி ஆகும். ‘ஈன்றான் பசி காண்பான் ஆயினும்” (குறள். 656.) என்றது காண்க. “தாயர்பசி கண்டு நனி தன் பசி தணிக்கும், நாயனைய புல்லர் உறு நாகில் உறுவேன்” (வில்லி. 41.182.) என்றதும் இக் கருத்தினதே. ‘தீ எரி நரகம்’ ஒருவகை நரக விசேடம். நான்கு பாடல்களால் பதினான்கு பேரைச் சுட்டி‘அவர்கள் செல்கின்ற நரகத்துக்கு யானும் செல்க - கைகேயி எனக்குத் தெரிந்து வரம்கேட்டாளாயின்’ என்று பரதன் கூறினான். பின்வரும் பாடல்களும் இவ்வாறே ஆகும். 101 |