2203.‘தாளினில் அடைந்தவர்தம்மை, தற்கு ஒரு
கோள் உற, அஞ்சினன் கொடுத்த பேதையும்,
நாளினும் அறம் மறந்தவனும், நண்ணுறும்.
மீள அரு நரகிடைக் கடிது வீழ்க, யான்.

    ‘தாளினில் அடைந்தவர் தம்மை - (என்னைப் பாதுகாக்க வேண்டும்
என்று சொல்லித்) தன்னடியில் அடைக்கலமாக - வந்து சேர்ந்தவர்களை;
தற்கு ஒரு கோள் உற - (அவர்களக்கு அடைக்கலம்அளித்ததனால்)
தனக்கு ஒரு தீங்கு உறலாயிருக்க அதற்கு அஞ்சியவனாய் எதிரி கையில்
காட்டிக்கொடுத்துத்தான் உயிர் தப்பிய அறிவிலியும்; நாளினும் அறம்
மறந்தவனும்
-சிறந்த நாளினும் கூடத் தருமவழியில் செல்லாது
மறந்தவனும்; நண்ணுறும் - சென்று அடைகின்ற; மீள அரு நரகிடை-
திரும்ப வரமுடியாத அரிய நரகத்திடத்து; யான் கடிது வீழ்க-யான்
விரைந்து வீழ்வேனாக.’

     அடைக்கலம் கொடுத்தோரைக் காத்தல் பேர் அறம் ஆகும். “உய்ய,
“நிற்கு அபயம்”என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாகக்
கையன்......மீள்கிலா நரகின் வீழ்வார்” (6478.) என்பதை ஈண்டு ஒப்பு
நோக்குக.  “தஞ்சென அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும்,நஞ்சனைய
பாதகர் நடக்கும் நெறி சேர்வேன்” (வில்லி. 41 - 183.) என்ற  பாரதமும்
இதனைப்பின்பற்றியதே ஆகும். ‘நாளினும்’ எந்நாளினும் எனவும்
உரைக்கலாம்.                                               102