2204. | ‘பொய்க் கரி கூறினோன், போருக்கு அஞ்சினோன். கைக் கொளும் அடைக்கலம் சுரந்து வவ்வினோன். எய்த்த இடத்து இடர் செய்தோன், என்று இன்னோர் புகும் மெய்க் கொடு நரகிடை விரைவின் வீழ்க, யான். |
‘பொய்க் கரி கூறினோன்- (நீதி மன்றத்தில்) பொய்ச்சான்று கூறியவன்; போருக்கு அஞ்சினோன் - போருக்கு வீரமாகப்புறப்பட்டுச் சென்று பயந்து திரும்பியவன்; கைக்கொளும் அடைக்கலம் சுரந்து வவ்வினோன்- பாதுகாப்பதாகப் பற்றிய அடைக்கலப் பொருளை (உடையவனை ஏமாற்றி) மறைத்துத் (தான்)எடுத்துக்கொண்டவன்; எய்த்த இடத்து இடர் செய்தோன் - (ஒருவரை அவர்) இளைத்துஇடத்திலே மேலும் துன்பம் செய்தோன்; என்று இன்னோர் புகும் - என்றிவ்வாறு சொல்லப்பெறும் இந்நால்வரும் சென்றுபடும்; மெய்க் கொடு நரகிடை - உண்மையான கொடியநரகத்திடத்து; யான் விரைவின் வீழ்க - யான் விரைந்து வீழ்வோனாக.’ ‘போருக்கு அஞ்சினோன்’ - முன் பாடல்களில் உள்ள ‘புரவலன் தன்னொடும் அமரில் புக்குஉடன் விரவலர் வெரிநிடை விழிக்க மீண்டுளோன்’ என்பதும் (2200) “நாயகன் பட நடந்தவனும்”(2202) என்ற இரண்டும் இதனின் வேறுபட்டவை. அரசனோடு புகுந்து அவனைவிட்டு ஓடிவருதல், அரசன்இறக்கக் கவலை இன்றித் தான் உயிர்பிழைத்துவருதல் என்பன அவை, இது போருக்கு வீரம் பேசிச்சென்று களங்கண்டவழி அஞ்சுகிற பேடித் தன்மையாலும். இந்நால்வரும் செல்லும் நரகத்தில் நான் புகுக என்றான் பரதன். 103 |