2205. | ‘அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன். மைந்தரைக் கொன்றுளோன், வழக்கில் பொய்த்துளோன், நிந்தனை தேவரை நிகழ்த்தினோன், புகும் வெந் துயர் நரகத்து வீழ்க, யானுமே. |
‘அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்- வேதம் வல்ல மறையோர் வசிக்கின்ற இடத்தை நெருப்பை உண்ணும்படி செய்தவன் (தீ வைத்தவன்);மைந்தரைக் கொன்றுளோன் - சிறுவரைக் கொன்றவன்; வழக்கில் பொய்த்துளோன் -(இருவர் வழக்குத் தம்மிடம் நியாயத்துக்கு வந்தவழி) வழக்கில் பொய்த்தீர்ப்புச் செய்தவன்;தேவரை நிந்தனை நிகழ்த்தினோன் - தெய்வங்களை வைது உரைத்தவன் (ஆகிய இவர்); புகும் வெந்துயர் நரகத்து யான் வீழ்க - செல்லும் அக் கொடிய துன்பத்தைத் தரும்நரகத்தில் யான் வீழ்வேனாக.’ வாழும் இடத்துக்குத் தீவைத்தலே பாதகம். அதன் மேலும்அந்தணர் வசிக்கும் இடத்துக்கும் தீ வைத்தல்மாபாதகம். சிறுவரைக் கொல்லுதல்; பெற்றபிள்ளைகளைக் கொல்லுதலும் ஆம்..பொய்க்கரி கூறினோன் என்று முன்னர் வந்ததுசாட்சியாளர்க்கு; இது நடுவர்க்கு; இனி வாதி, பிரதிவாதி இருவருள் ஒருவர் பொத்தலும் இங்கே கொள்ளலாம். ‘யானும்’ என்ற உம்மை எச்ச உம்மை. 104 |