2207.‘ஆறு தன்னுடன் வரும்
     அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்க, தன்
     உயிர் கொண்டு ஒடினோன்.
சோறு தன் அயலுளோர்
     பசிக்கத் துய்த்துளோன்,
ஏறும் அக் கதியிடை
     யானும் ஏறவே.

    ‘தன்னுடன் ஆறு வரும் அம் சொல் மாதரை - தன்னுடனே (தன்
பாதுகாப்பில்) வழியில் வந்துகொண்டுள்ள அழகிய பேச்சுகளை உடைய
பெண்களை;ஊறு கொண்டு அலைப்ப - வழிப்பறிக் கொள்ளையர்
புண்படுத்தித் துன்புறுத்த; தன்உயிர் கொண்டு ஓடினோன் -
(அவர்களைக் காப்பாற்றாமல் கைவிட்டுத்) தன்னுடைய உயிரைப்
பாதுகாத்துக் கொண்டு ஓடிவிட்டவன்; தன் அயலுளோர் பசிக்கச் சோறு
துய்த்துளோன்
-தன் பக்கத்தில் உள்ளவர்கள் பசியால் வருந்த
(அவர்களுக்குச் சோறு கொடாது) சோற்றினைத்தானே உண்டு முடித்தவன்;
ஏறும் அக்கதியிடை யானும் ஏற - (இவ் இருவரும்) செல்லுகின்றஅந்த
நரகக் கதியிடத்து யானும் செல்வேனாக.’

     வழியில் உடன்வரும் மகளிரைப் பாதுகாக்க உயிரைக்கூட இழப்பது
பெரும் புண்ணியச் செயல்.அவர்களைக் கைவிட்டுத் தன்னுயிரைப்
பாதுகாத்துக் கொண்டு ஓடிவிடுகின்றவன் மாபாதகன். கதிகள்தேவகதி,
மக்கள் கதி, விலங்கு கதி, நரககதி என்னும் நான்கு. அதனுள் இவர் செல்கிற
கதிநரககதி ‘ஏ’ ஈற்றசை.                                       106