2208. | ‘எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன், உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான், அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள் வெஃகிய மன்னன், வீழ் நரகின் வீழ்க, யான். |
‘எஃகு எறி செருமுகத்து - ஆயுதங்களை வீசிப் போர்செய்யும் போர்க்களத்து’ ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன் - எதிர்த்துப் போர் புரியும் பகைவர்களுக்கு எதிரே (தானும்போர் செய்யாமல் உயிராசையால்) வணங்கியவன்; உயிர் வளர்த்து உண்ணும் ஆசையால் - உயிரை உடலில் நிலைபெறச்செய்து நெடுநாள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்கின்ற ஆசையாலே;அஃகம் இல் அறநெறி ஆக்கியோன் பொருள் வெஃகிய மன்னன் - சுருங்குதல் இல்லாத பெரியஅறவழியில் பொருள் சேர்த்தவனது பொருளைப் (பேராசைப்பட்டு) கைப்பற்றிக் கொண்ட அரசன்; வீழ் நரகின் யான் வீழ்க - விழுகின்ற நரகத்தில் யானும் வீழ்வேனாக.’ ‘உயிர் வளர்த்து உண்ணும் ஆசையால்’ என்பதனை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, ‘எஃகு எறி செருமுகத்து’ என்பதன் முன்னும் கூட்டிப் பொருள் செய்யலாம். -இது இடைநிலை விளக்கணி என்றும், தாப்பிசைப் பொருள்கோள் என்றும் கூறப்பெறும்.‘கொள்பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தன்” (திரிகடுகம் 50) எனக் கூறுவர் இம்மன்னனை. 107 |