2209.‘அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று,
இழி வரு சிறு தொழில் இயற்றி, ஆண்டு, தன்
வழி வரு தருமத்தை மறந்து, மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக, யான்.

    ‘அழிவு அரும் அரசியல் எய்தி- கெடுதல் இல்லாத அரசாட்சியை
அடைந்து’ ஆகும் என்று - (எனக்கு) எதுவும் செய்ய இயலும்என்று கருதி;
ஆண்டு - அரசாட்சி நடத்தி; தன் வழிவரு தருமத்தை மறந்து -
தன்னுடைய பாரம்பரியமான குலதருமத்தை மறந்து (கை விட்டு); மற்று -
வேறாகிய;  ஒருபழிவரு நெறி - தனக்குப் பழி வந்து சேரக் கூடிய
வழியில்; படர் - விரித்துசெல்கின்ற;  பதகன் - பாவியாக;  யான் ஆக -
யான் ஆவேனாக.’

     அரசேற்றவன் அறவழியில் நடக்க வேண்டும்; வேறு வழியில் சென்றால்
பாவியாகிறான்; அவனைப்போல நானும் ஆவேனாக என்று பரதன் சூளுரை
செய்தான்.                                                   108