2210. | ‘தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற, வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக் கொள அஞ்சின மன்னவன் ஆக யானுமே. |
யான் -; தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் - (நீயே எமது) அடைக்கலம்எம்மைப் பாதுகாக்க என்ற தன்னிடத்தில் வந்து அடைந்த தன் குடிமக்கள்; எஞ்சல் இல்மறுக்கினோடு- குறைதல் இல்லாத (அதிக) மனக் கலக்கத்தோடு; இரியல் போய் உற- கெட்டு ஓடும்படியாக; வஞ்சி சென்று இறுத்தவன் - வஞ்சி மாலை புனைந்து மண்ணாசை காரணமாகப்படை எடுத்துத் (தன் எல்லையில்) தங்கிய பகை அரசன்; வாகை மீக் கொள - வெற்றிமேற்கொண்டு ஆரவாரம் செய்ய; அஞ்சின மன்னவன் - அப்பகைவனோடு தன் உயிர் உள்ளதுணையும் தன் மக்களைக் காப்பாற்றப் போர் செய்யாமல் பயந்த அரசன்; ஆக - (செல்லுகின்ற தீய கதியில்) செல்வேனாக. வஞ்சி - மண்ணாசைகாரணமாகப் படை எடுத்துச் சென்று பகைவர் நாட்டு எல்லையில் தங்கிச் செய்யும் போர்ப் பகுதி. வஞ்சி என்பது மேற்சேறல் எனப்பெறும்.அதற்கு வஞ்சிப்பூச் சூடுதல் உரித்து. வாகை - வெற்றி; வெற்றி பெற்றோர்வாகைப்பூச் சூடுவர் - ‘வாகைப்பூவை மேல்சூடிக்கொள்ள’ எனலும் ஆம். யானும், ‘உம்’ எச்சவும்மை. சிறப்பும்மை ஆகலும் ஆம். 109 |