2211. | ‘கன்னியை அழி செயக் கருதினோன், குரு பன்னியை நோக்கினோன், பருகினோன் நறை, பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும் இன்னவர் உறு கதி என்னது ஆகவே. |
‘கன்னியை - திருமணம் ஆகாத கன்னிப்பெண்ணை; அழிசெயக் கருதினோன் - கற்பழித்துக் கெடுத்தல்செய்ய நினைத்தவன்; குருபன்னியை நோக்கினோன் - ஆசான் மனைவியைத் தீய கருத்துடன் பார்த்தவன்; நறை பருகினோன் - கள் உண்டவன்; இகழ் களவினில் - (எல்லாராலும்) இகழப்படுகின்ற களவினால்; பொன் பொருத்தினோன் - பொன்னைச்சேர்த்தவன்; எனும் இன்னவர் - என்கின்ற (நால்வராய) இவர்கள்; உறு -அடைகின்ற; கதி - (நரக) கதி; என்னது ஆக - எனக்குரியது ஆகுக.’ ‘கன்னி’ என்பதற்குப் பூப்பு எய்தாத பெண் எனலும் ஆம். பெண்களைப் பூப்பு எய்தும் முன்னரேதிருமணம் செய்வித்தல் அக்கால வழக்கம். ‘ஏ’ ஈற்றசை. 110 |