2213. | ‘மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன், சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன், நறியன அயலவர் நாவில் நீர் வர உறு பதம் நுங்கிய ஒருவன், ஆக யான்.* |
‘யான் -; மறு இல் தொல் குலங்களை - குற்றம் சிறிதும் அற்ற பழமையான குலங்களை; மாசு இட்டு ஏற்றினோன் - குற்றம் உள்ளவை என்று குற்றம் கற்பித்து (அதனை உலகம் நம்புமாறுசெய்து குலக்) கேடு சூழ்ந்தவன்; சிறுவிலை - பஞ்ச காலத்தில்; எளியவர் -ஏழை எளிய மக்களது; உணவு - அற்ப உணவை; சிந்தினோன் - சிதறப் பண்ணியவன்; அயலவர் நாவில் நீர்வர - பார்த்துக் கொண்டிருக்கின்ற பக்கல் உள்ளவர் நாக்கில்நீர்ஊறும்படி; (அவர்களுக்குக் கொடாமல்) நறியன உறுபதம் - நறுமணம் உள்ள நல்லசிறந்த உணவை; நுங்கிய - தானே விழுங்கிய; ஒருவன் -; ஆக - (இம் மூவரும்செல்லும் தீய கதியில்) செல்வேனாக.’ விலை மிகுந்து பொருள் குறைவது பஞ்சகாலத்தில். அதனால், சிறு விலைக் காலம் என்று பஞ்சகாலத்தைச் சொல்வர். உணவைச் சிந்துவதே பாவம்; அதனினும் எளியவர்உணவைச் சிதறுதல் பெரும்பாவம் ஆகும். 112 |