2215.‘ஏற்றவற்கு, ஒரு பொருள் உள்ளது, இன்று என்று
மாற்றலன், உதவலன், வரம்பு இல் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்
கூற்று உறு நரகின் ஒர்கூறு கொள்க, யான்.

    ‘யான்-; ஏற்றவற்கு- தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு; ஒரு பொருள்-
ஒரு பொருளை; உள்ளது என்று உதவலன் -இருக்கிறது என்று சொல்லிக்
கொடுக்காமலும்; இன்று என்று மாற்றலன் - இல்லை என்றுசொல்லி
(அவர்களைத் தம்பால் வருதலைப்) போக்காமலும்; வரம்பில் பல்பகல்
ஆற்றினன்உழற்றும் ஓர் ஆதன்
- கணக்கில்லாத பல நாள்கள் செய்து
அவனை அங்கும் இங்குமாக உழல(திரிய)ச் செய்யும் ஒரு கொடிய பாவி;
எய்தும் அக்கூற்று உறு நரகின் - அடைகி்ன்றஅந்த யமவாதனை
நிரம்பிய நரகத்தில்; ஓர் கூறு கொள்க - ஒரு பங்கினை நானும்
பெறுவேனாக.’

     ‘ஒல்லுவது ஒல்லும் என்றலும் யார்க்கும், ஒல்லாது இல்லென
மறுத்தலும் இரண்டும் ஆள்வினைமருங்கிற் கேண்மைப் பால; ஒல்லாது
ஒல்லும் என்றலும் யார்க்கும், ஒல்லுவது இல்லென மறுத்தலும்வல்லே,
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்”
(புறநா.196.) என்பதும் “இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும் வசை
அன்று; வையத் தியற்கை; நசை அழுங்நின்று ஓடிப் பொய்த்தல்.....குற்றம்
உடைத்து” (நாலடி. 111.) என்பதும் இங்கு ஒப்பு நோக்குக.ஆதன் - மூடன்,
அறிவீனன், பசுப் போன்றவன் என்றும் பொருள்கூறுலாம்.           114