பரதனைத் தெளிந்து மேலும் கோசலை அழுதல் 2219. | செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும், அம்மை தீமையும், அறிதல் தேற்றினாள்; கொம்மை வெம் முலை குமுறு பால் உக, விம்மி விம்மி நின்று, இவை விளம்புவாள்:* |
செம்மை - நேர்மையான; நல் மனத்து - நல்ல மனத்தை உடைய; அண்ணல்- பரதனது; செய்கையும் - செயலையும்; அம்மை - அவன் தாயாகிய கைகேயியின்; தீமையும் - தீக்குணத்தையும் (அதனால் விளைந்த தீய செயல்களையும்); அறிதல்தேற்றினாள் - (பரதன் சொல்லிய சூளுரையால்) அறிந்து தெளிந்த கோசலை; கொம்மைவெம்முலை- பருத்த சூடுடைய தனங்களில் இருந்து; குமுறு பால் உக - உள்ளே பொங்கும்பால் சிந்த; விம்மி விம்மி நின்று - அழுது அழுது; இவை விளம்புவாள் - இவற்றைக் கூறுலானாள். முன்னரே தேர்ந்தாள் ஆயினும் “கைகயர் கோமகள் இழைத்த கைதவம், ஐய நீ அறிந்திலை போலும்” (2197) என்று கோசலை பரதனைச் கேட்ட போது, அவன்தாய் கோசலையும் சந்தேகித்துத்தான் ‘போலும்’ என்றாளாகக் கருதிச் சூளுரை செய்தான். அதனால்ஐயம் நீங்கி நன்கு தெளிந்தாள் ஆயிற்று. தாய்ப் பாசம் மிக்க வழி முலைப்பால் பீறிட்டுச் சிந்துவது தாய்மைக்கு இயல்பு. பல்கால் விம்முதல் - நிகழ்ந்தவைக்காக மட்டுமன்றித், தன்வினாவால் அவன் சூளுரைக்க நேர்ந்தது பற்றியும் ஆம். ‘அண்ணல் செய்கை’ என்பதற்குத் ‘தசரதன்செய்கை’ என்பார் உளர். ‘அண்ணல் செய்கை’ என்பதன்பின், ‘கைகேயி தீமையும்’ என்று வராமல் ‘அம்மை’ என வருதலின் அவ் அம்மைக்கு மகனாகிய பரத அண்ணலே பொருளாகும் எனஅறிக. 118 |