பரதன் வசிட்டனை வணங்கலும்வசிட்டன் தழுவி அழுதலும்  

2222.வந்த மாதவன் தாளில், வள்ளல் வீழ்ந்து,
‘எந்தை யாண்டையான்? இயம்புவீர்?’ எனா,
நொந்து மாழ்கினான்; நுவல்வது ஓர்கிலா
அந்த மா தவன் அழுது புல்லினான். *

     வள்ளல்- பரதன்; வந்த மா தவன் தாளில் வீழ்ந்து- அங்கே
வந்தவசிட்ட முனிவன் திருவடிகளில் விழுந்து; ‘எந்தை யாண்டையான்-
என் தந்தையாகியதசரதன், எவ்விடத்தான்?; இயம்புவீர்- சொல்வீராக?;’
எனா - என்று; நொந்துமாழ்கினான் - மனம் கெட்டு மயங்கினான்;
நுவல்வது ஓர்கிலா அந்த மாதவன் - சொல்வதற்குவகையறியாத
அந்த வசிட்டனும்; அழுது புல்லினான் - பரதனைத்தழுவி அழுதான்.

     “எந்தை யாண்டையான்” தசரதனைப் பற்றிய வினாவாதல் அன்றி
இராமனைப் பற்றியவினாவாகவும் அமையும். “எந்தையும்...இராமன்” (2159)
என்று பரதன் முற்கூறினனாதலின் ‘இராமன்எவ்விடத்தான்’ என வினாவினன்
எனலும் ஆகும். அதற்கும் முனிவன் பதில் உரைக்கமாட்டுகின்றிலன்.   121