கோசலை பரதனை நோக்கி இறுதிக்கடன் செய் எனல் 2223. | ‘மறு இல் மைந்தனே! வள்ளல், உந்தையார், இறுதி எய்தி நாள் ஏழ் - இரண்டின; சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி’ என்று, உறுவல் மேயினாள் உரையின் மேயினாள். |
‘மறு இல் மைந்தனே!- களங்கம் இல்லாத மகனே! (பரதனே); வள்ளல் உந்தையார் - வண்மையுடையராகிய உன்தந்தையார்; இறுதி எய்தி - மரணம் அடைந்து; நாள் ஏழ் இரண்டின - பதினான்கு நாள்கள் ஆயின; சிறுவர் செய்கடன்- பெற்றோர்களுக்குப் புதல்வர் செய்யவேண்டிய இறுதிக்கடன்களை; செய்து தீர்த்தி’- செய்து முடிப்பாயாக;’ என்று உறுவல் மேயினாள்உரையின் மேயினாள்- என்று துன்பத்தில் பொருந்தியவளாய கோசலைத தன் சொல்லால்பரதனுக்கு அனுமதி தந்தாள் ‘நாள் ஏழ் இறந்தன’ என்று பாடம் கூறி, ‘ஏழ் நாள்கள் ஆயின; இன்று எட்டாவது நாள்’எனல் உண்டு, தூதுவர் செய்தி தாங்கிச் சென்று பரதனிடம் சொல்ல, அவன் மீண்டும் அயோத்திஎய்த இடைப்பயணம் ஏழு, ஏழு நாள்கள் ஆதலின் பதினான்கு எனலேநேரிதாதல் அறிக. கோசலத்துக்கும்கேகயத்துககும் ஏழு நாள் வழிப்பயனம் என்பது முன்னர்க் கூறினும். “ஏழு நாளிடை, நளிர்புனல்கேகய நாடு நண்ணினான்” எனவும், “ஏழ் பகல் நீந்தி, “கோசலம் நண்ணினான்” எனவும் (1311,2118) வருவனவற்றைக் காண்க. 122 |