பரதன் வசிட்ட முனிவனோடு சென்று தந்தையின் திருவுருவை நோக்கல் 2224. | அன்னை ஏவினாள், அடி இறைஞ்சினான்; பொன்னின் வார் சடைப் புனிதனோடும் போய், தன்னை நல்கி, அத் தருமம் நல்கினான் பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான். |
ஏவினாள்-(தந்தைக்கு நீர்க்கடன் செய்யச் செல்க) என்று ஏவிய; அன்னை அடி இறைஞ்சினான் -தாயின் திருவடிகளைவணங்கி; பொன்னின் வார்சடைப் புனிதனோடும் போய்- பொன்னொத்த சிவந்த நீண்டசடையினை உடைய தூய மாமுனிவனாகிய வசிட்டனோடும் சென்று; தன்னை நல்கி அத் தருமம்நல்கினான்-தன்னை (தன் உயிரை) அர்ப்பணித்து அந்தத் தருமத்தைக் காப்பாற்றியதயரதனது; பன்னு- (பலராலும்) பல முறை பாராட்டப் பெறுகின்ற; தொல் அறப்படிவம்- பழமையான அறத்தின் திருவுருவத்தை; நோக்கினான் -பார்த்தான். செம்பொன்போலச் சிவந்திருத்தலின் ‘பொன்சடை’ என்றார். ‘தன் உயிர் தந்து தருமம்காத்தவன்’ தயரதன் என்பதனைப் பின்வரும் “வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவள்ளல்” என வரும் (4018) வாலி கூற்றானும் தெளிக. தைலக் கடாரத்துள் இடப்பட்டிருந்த மேனியைஎடுத்துக் கட்டிலிற் கிடந்தப் பரதன் கண்டனன் என்க. 123 |