பரதன் தந்தையின் திருமேனி கண்டு புலம்பல் 2225. | மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான், அண்ணல், ஆழியான், அவனி காவலான், எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை, கண்ண நீரினால் கழுவி ஆட்டினான். |
(பரதன் ) மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் - பூமியின் மேலே விழுந்துபுலம்பி மயங்குபவனாகி; அண்ணல் - பெருமை பொருந்திய; ஆழியான் -ஆணைச்சக்கரத்தை உடைய; அவனி காவலன் - உலக வேந்தனாய தயரதனது; எண்ணெய் உண்ட -தைலத்திற் கிடந்த; பொன் எழில் கொள் மேனியை - பொன் மயமான அழகு கொண்ட திருமேனியை; கண்ண நீரினால் - (தன்) கண்களிலிந்து பெருக்கெடுத்து வரும் கண்ணீரினால்; கழுவி - தூய்மை செய்து; ஆட்டினான்- மூழ்கச் செய்தான். எண்ணெயில் மூழ்கிக் கிடந்த மேனி இப்போது பரதன் கண்ணீரில் மூழ்கியது என நயம்காண்க. எண்ணெயாட்டியதால் மேனி பொன்னிறம் பெற்றது என்பது வான்மீகத்திற் கண்டது. 124 |