சாப்பறை முதலியன ஒலித்தல்  

2228.சங்கு பேரியும், தழுவி சின்னமும்
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ,
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் எனப்
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே.

    சங்கு- சங்குகளும்; பேரியும் - சாப்பறையும்; தழுவு சின்னமும் -
இறப்பின் கண்ஊதப்படுகின்ற கொம்புகளும்;  எங்கும் எங்கும் நின்று
இரங்கி ஏங்குவ
எல்லாப்பக்கங்களிலும் இருந்து கேட்பவர்க்குத்
துன்பமுண்டாம்படி அமுதாற்போல ஒலிக்கின்றவை; மங்குல்நோய் நகர் -
மேகங்கள் வந்து  படியப் பெறுகின்ற நகரம்; மகளிராம் என -(தானே)
பெண்களைப் போலிருந்து; பொங்கு கண் புடைத்து - துன்ப மிகுதியுடைய
கண்களைஅடித்துக்கொண்டு; அழுவ போன் அழுகின்றவை போன்றன.

     பறை முதலியன ஒலித்தல் நகரமே கண்புடைத்து அழுதல் போலும்,
கண் புடைத்து அழுதல்‘மகளிர்போல’ என்று கூறினார். பேரி - பெருமுரசு.
இங்குச் சாப்பறை ஆம்.                                       127