தயரதன் உடலம் சரயு நதி அடைதல் 2229. | மாவும், யானையும், வயங்கு தேர்களும், கோவும், நான் மறைக் குழுவும், முன் செல, தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை தாவு வார் புனல் சரயு எய்தினார். |
மாவும் - குதிரைகளும்; யானையும் - யானைகளும்; வயங்கு - விளங்குகின்ற; தேர்களும் -; கோவும் - அரசர்களும்; நான்மறைக் குழுவும் -நான்மறையாளர் கூட்டமும்; முன்செல - முன்னே செல்ல; கொண்டு - (தயரதனதுபிரேதத்தைக்) கொண்டுசென்று; தேவிமாரொடும் - (தயரதன்) மனைவிமாருடனே; தெண்திரைதாவு - தெள்ளிய அலைகள் தாவுகின்ற; வார் புனல் - மிக்க தண்ணீரை உடைய; சரயுஎய்தினார் - சரயு நதியை அடைந்தார்கள். தேவிமார் அறுபதினாயிரவர். “தேவிமாரை இவற்குரிமை செய்யும் நாளில் செந்தழலில், ஆவிநீத்திர் என இருத்தி” (1915.) என்பது காண்க. 128 |